FranceTAMILS

 Breaking News

தலைநகர் பரிஸ் கூட்டத்திலும் கடுமையான விமர்சனத்தினை சந்தித்த தமிழ்தேசியக் கூட்டமைப்பினர் !!

தலைநகர் பரிஸ் கூட்டத்திலும் கடுமையான விமர்சனத்தினை சந்தித்த தமிழ்தேசியக் கூட்டமைப்பினர் !!
juillet 14
18:16 2020

தமிழர் தாயகம் சிறிலங்கா அரசாங்கத்தின் நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொண்டுள்ள நிலையில், அத்தேர்தல் தொடர்பில் தலைநகர் பரிசில் இடம்பெற்றிருந்த விழிப்புணர்வு கூட்;டமொன்றில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் கடுமையான விமர்சனத்தினை எதிர்கொண்டுள்ளனர்.

கூட்டமைப்பினரின் செயற்பாடுகள் தொடர்பில் தாயகத்தில் மட்டுமல்ல, புலம்பெயர் நாடுகளிலும் கடுமையான விமர்சனத்தினை சந்தித்துவரும் நிலையில், அது பரிஸ் கூட்டத்திலும் எதிரொலித்துள்ளது.

குறிப்பாக தமிழ்தேசியத்துக்கும், தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்கும் எதிரான எம்.ஏ.சுமந்திரன் அவர்களது கருத்துக்களுக்கு கடுமையான விமர்சனங்களை முன்வைத்திருந்த இக்கூட்டத்தினை ஏற்பாடு செய்திருந்த கலைஞர் வட்டம் விடுத்துள்ள உத்தியோகபூர்வ அறிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :

PR_paris meeting SL election

தமிழர் தேசத்தின் மீதான சிங்களப் பேரினவாத அரசின் 2009ம் ஆண்டு ஆக்கிரமிப்பு பின்னராக, சிறிலங்காவின் மற்றுமொரு நாடாளுமன்றத் தேர்தலை தமிழர் தேசம் எதிர்கொண்டுள்ளது.

சிறிலங்காவின் தேர்தல்கள் ஊடாக தமிழர் தேசம் தனக்கான உரிமைகளையோ, நீதியினையோ கண்டுவிட முடியாது என்பது கடந்தகால வரலாறுகள் நமக்கான படிப்பினையாக இருக்கின்ற போதிலும், தேசம், ஆக்கிரமிப்புக்கு உள்ளான நிலையில், இத்தேர்தலை ஒரு கருவியாக கையாண்டு தமிழர்களின் நிலைப்பாட்டினை உலகிற்கு வெளிக்காட்ட வேண்டியவர்களாக நாம் உள்ளோம்.

இன்று இலங்கைத்தீவு இந்தியப் பெருங்கடலின் புவிசார் அரசியலின் சர்வதேச சக்திகளின் களமாக மாறிவிட்ட நிலையில், தமிழர்களின் வாக்குகள் என்பது வலுவான ஓர் ஜனநாயக ஆயுதமாக மாறிவிட்டது.

இந்நிலையில் தாயக மக்கள் ஜனநாயக வழிமுறையில் தமது நிலைப்பாட்டினை வெளிப்படுத்த தயாராகி வரும் இவ்வேளையில் புலம்பெயர் தமிழர்களாகிய நாம், குறிப்பாக பிரான்ஸ் வாழ் தமிழர்களாகிய நாம், எமது எண்ணப்பாட்டினை தாயகம் நோக்கிச் சொல்ல வேண்டியவர்களாக இருக்கின்றோம்.

அதனடிப்படையில் கலைஞர்கள் வட்டத்தின் ஒருங்கிணைப்பில் , யூலை 12ம் நாள் ஞாயிற்றுக்கிழமை தேர்தல் தொடர்பிலான ஒரு விழிப்புணர்வு கூட்டமொன்றினை தலைநகர் பரிசில் நடாத்தியிருந்தோம்.

இதில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், தமிழீழ மக்கள் பேரவை – பிரான்ஸ், தமிழர் புனர்வாழ்வுக் கழகம், போராளிகள் கட்டமைப்பு பிரதிநிதிகள் கலந்து கொண்டு தமது நிலைப்பாட்டினை தெரிவித்திருந்தனர்.

பங்கெடுத்திருந்த சமூக, அரசியல் ஆர்வலர்கள் செயற்பாட்டாளர்களும் கருத்துக்களை முன்வைத்திருந்தனர்.

ஒருவருக்கு ஒருவர் எதிர்வினையாற்றுகின்ற கருத்தாடற்களமாக அல்லாமல், ஒவ்வொருவரும் தமது நிலைப்பாடுகளை முன்வைக்கின்ற அரங்காக இதனை அமைத்திருந்தோம்.

– கடந்த 11 ஆண்டுகளில் தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக சிறிலங்காவின் நாடாளுமன்றத்துக்குச் சென்றவர்கள், மக்களின் வாழ்வாதாரத்துக்கான மேம்பாட்டிலும், தேசத்தின் நீதிக்கும் அரசியல் இறைமைக்குமான செயற்பாட்டில் எதனை சாதித்துக் கொண்டார்கள் என்ற கேள்வி பலமாக முன்வைக்கப்பட்டது.

– மக்களின் வாழ்வாதாரத்துக்கும், பொருளாதாரத்துக்கும் மக்கள் கையேந்தும் நிலையே இன்றைக்கும் காணப்படுவதோடு, குறைந்தபட்சம் இதனை தீர்ப்பதற்கான ஒரு செயற்திட்டத்தினையாவது சர்வதேசத்தினை நோக்கி இப்பிரதிநிதிகள் முன்வைத்திருந்தார்களாக என்ற கேள்வியும் முன்வைக்கப்பட்டது.

– இழைக்கப்பட்ட இனப்படுகொலைக்கான நீதியினை பெற, சர்வதேச நீதிமன்றத்தில் சிறிலங்காவை பாரப்படுத்த பாடுபடுதல், தமிழர்களின் அரசியல் தீர்வுக்கான பொறிமுறையாக தமிழர்களிடத்தில் பொதுவாக்கெடுப்பு ஒன்று நடத்துவதற்கு பாடுபடுதல், சிறிலங்காவின் ஆறாம் திருத்தச்சட்டத்தினை நீக்க, குரல் கொடுத்தல் ஆகிய விடயங்கள் தமிழர் கட்சிகள் தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்ளடக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், தமிழீழ மக்கள் பேரவைப் பிரிதிநிதிகள் வலியுறுத்தி இருந்தனர்.

– சிறிலங்கா அரசாங்கத்துக்கு தோள்கொடுத்து தமிழர்களின் நீதிக்கும் அரசியல் இறைமைக்குமான போராட்டத்தினை நீர்த்துப் போகச் செய்கின்ற செயற்பாட்டிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் செயற்பாடு அமைந்திருந்ததோடு, கூட்டமைப்பினரின் மீதான கடுமையான அதிருப்தி பெரும்பாலானவர்கள் முன்வைத்திருந்தனர்.

– எம்.ஏ.சுமந்திரன் அவர்களது கருத்துக்கள் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தினை கொச்சைப்படுத்தி வருவதோடு, சிறிலங்கா அரசாங்கத்துடனான அவரது இணக்க அரசியல் செயற்பாடே அவரிடம் காணப்படுவதாக குற்றஞ்சாட்டப்பட்டதோடு, சிறிலங்கா மீதான சர்வதேசத்தின் அழுத்தங்களில் இருந்து சிறிலங்காவை காப்பாற்றி விடுவிக்கின்ற செயற்பாட்டிலும் அவர் ஈடுபட்டு வருகின்றார் என்றும் தெரிவிக்கப்பட்டது.

– கட்சி அரசியலைக் கடந்து விடுதலை அரசியலை முன்னிறுத்தி தமிழ்த் தேசியத்தினை முன்னெடுத்துச் செல்ல வேண்டியவர்கள் மக்களால் தேர்வு செய்யப்பட வேண்டும் என்பதோடு, இந்த நிலைப்பாட்டில் தேர்வு செய்யப்படுகின்றவர்கள், கட்சி அரசியலைக்கடந்து அனைவரும் தமிழ்த் தேசியம் நோக்கி ஐக்கியப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அரங்கில் பொதுக்குரலாக ஒலித்தது.

சிறிலங்காவின் நாடாளுமன்றத்தில் தமிழ் உறுப்பினர்கள் அங்கம் வகிப்பது சிறிலங்கா அரசின் சிங்கள பௌத்த இனவாத குணாம்சங்களை மாற்றியமைத்து விடப் போவதில்லை. சிறிலங்காவின் நாடாளுமன்றமே சிங்கள இனவாதத்தின் மையமாக இருந்து வருவதையும் தமிழ் மக்கள் நன்கறிவார்கள். சிங்கள பௌத்த மேலாண்மையை நிலைநிறுத்தும் சட்டங்களும், தமிழ் மக்களின் தேசிய வாழ்வைச் சிதைக்க வழிவகை செய்யும் சட்டங்களும் இந் நாடாளுமன்றத்திலேயே நிறைவேற்றப்படுகின்றன.

தமிழ் மக்கள் தமது உரிமைகளை வென்றெடுப்பதில் உறுதியாகவும் விழிப்புணர்வுடனும் இருக்க வேண்டும். சிங்களத் தலைமைகள் மட்டுமல்ல, தமிழ்த் தலைமைகளும் ஏமாற்றுவதற்கு நாம் இடமளிக்கக் கூடாது. தமிழர் தேசத்தின் நீதிக்கும் அரசியல் இறைமைக்கும் உண்மையாகவும் விசுவாசமாகவும் இருக்கக்கூடியவர்களை இத் தேர்தலில் மக்கள் தமது பிரதிநிதிகளாகத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

ஒவ்வொரு தவறான முடிவுக்கும் நாம் பின்னர் விலை கொடுத்தாக வேண்டும் என்பதனையும் மக்கள் கவனத்திற் கொள்ளவேண்டும்.

தேர்தலுக்குப் பின்னர் தமிழர்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்கு ஈழத் தமிழர் தேசம் அரசியல் இராஜதந்திர வழியில் தீவிரமாகப் போராட வேண்டிய நிலையே வரும். நான் என்பதனை விடுத்து நாம் என்ற மனோநிலைக்கு தேசமாக சிந்தித்து பொறுப்புள்ளவர்களாக தமிழ் தேசத்தின் விடுதலைக்கு பங்காற்ற வேண்டும்.

இப் போராட்டத்தில் தாயகம், புலம் பெயர் தமிழ் மக்கள், தமிழகம் மற்றும் உலகத் தமிழ் மக்கள் அனைவரும் கைகோர்த்து ஈடுபட வேண்டியது அவசியமானதாக இருக்கும். அதனை நோக்கிய தாயக மக்கள் தமது வாக்குகளை ஓர் ஜனநாய ஆயுதமாக இத்தேர்தலை கையாள வேண்டும் என இந்த அரங்கு வேண்டிக் கொள்கின்றது.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

E-PAPER

சுவாசக்கவசம் : யார் ? எதற்கு ? எவ்வாறு ?