FranceTAMILS

 Breaking News

பரிசின் நகரசபைத் தேர்தல் வெற்றியை தீர்மானிக்கும் சக்தியாக சைக்கிள் !!

பரிசின் நகரசபைத் தேர்தல் வெற்றியை தீர்மானிக்கும் சக்தியாக சைக்கிள் !!
juin 23
06:19 2020

கொரோனா வைரஸ் பெருந்தொற்று நெருக்கடிக்கு பின்னராக பொதுமக்களிடையே சைக்கிள் பாவனை அதிகரித்துள்ளதோடு, தலைநகர் பரிசின் மேயர் தேர்தலுக்கான வெற்றியைத் தீர்மானிக்கும் சக்தியாக ‘சைக்கிள்’ உருவெடுத்துள்ளது.

வைரஸ் தொற்றினை பெருமளவு குறைக்கும் நோக்கில் பொதுப்போக்குவரத்துக்களில் சனநெரிசலை குறைக்கும் முகமாக வீதிகளில் சைக்கிள்களுக்கான தனிவழித்தடங்களை நகர சபைகள் பல அமைத்திருந்தன. இதற்கு Coronapiste என பெயர் இடப்பட்டன.

இதில் குறிப்பாக கொரோனாவுக்கு முந்திய காலம் முதலேயே தலைநகரில் வாகன நெரிசலைக்குறைக்கும் வகையில் சைக்கிள் பாவனையினை ஊக்குவிக்கும் செயற்பாட்டில் தீவிரமாக செயற்பட்டு வந்தவர் பரிசின் தற்போதைய மேயர் ஆன் ஹிடல்கோ அவர்கள். இவர் சோசலிசக் கட்சியினை சேர்ந்தவர். 2014 இல் மேயர் பதவிக்கு வந்த ஆன் ஹிடல்கோ, தலைநகரின் முதலாவது பெண் மேயர் என்ற பெருமைக்குரியவர்.

தற்போது சைக்கிள் பாவனை மக்களிடையே அதிகரித்துள்ள நிலையில், இவரது சைக்கிள் கொள்கைக்கான ஆதரவு மக்களிடையே அதிகரித்துள்ளது. திங்கட்கிழமை வெளிவந்த கருத்துக்கணிப்பில் 45 வீதமானவர்கள் தமது ஆதரவினை ஆன் ஹிடல்கோவுக்கு வெளிப்படுத்தியுள்ளனர். இவருக்கு எதிரான தேர்தல் களத்தில் மேலும் 2 பெண் வேட்பாளர்கள் தலைநகரின் முதற்குடிமகனுக்கான தேர்தலில் நிற்கின்றனர். (முன்னாள் அதிபர் நிக்கலஸ் சார்க்கோசி யின் அரசில் நீதி அமைச்சராக இருந்த
Rachida Dati,தற்போதைய மக்ரோன் அரசில் சுகாதார அமைச்சராகப் பதவி வகித்த Agnès Buzyn )

கொரோனோ பொதுமுடக்கம் காரணமாக ஒத்தி வைக்கப்பட்ட நகரசபைத் தேர்தல்களின் இரண்டாவது சுற்று வாக்களிப்பு வரும் 28 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவிருக்கிறது.

பெருநகரங்கள், நகரங்கள், கிராமங்கள் அடங்கலாக சுமார் 35 ஆயிரம் உள்ளூராட்சி கட்டமைப்புகளுக்கு தலைவர்களைத் தெரிவு செய்வதற்கான இத் தேர்தலின் முதற் சுற்று வாக்குப்பதிவு கடந்த மார்ச் 15 ஆம் திகதி நடைபெற்றது. வைரஸ் பரவலின் காரணமாக அன்றைய தினம் நாடு முழுவதும் மிகக் குறைந்த வாக்கு எண்ணிக்கை(45வீதம்) பதிவாகியிருந்தது.

கொரோனா வைரஸ் பெருந்தொற்றின் பரவலுக்கு உள்ளாட்சி சபைத் தேர்தலும் ஒரு காரணமென குற்றச்சாட்டுக்கள் காணப்படுவதோடு, பொதுமுடக்க நீக்கத்துக்கு பின்னராக வரும் இரண்டாம் சுற்றில் எத்தனை வீதமானவர்கள் வாக்களிப்பார்கள் என்பது எதிர்பார்ப்பாக உள்ளது.

இந்நிலையில் மக்கள் கூட்டம் நிறை தேர்தல் பிரச்சாரங்கள் அற்ற களமாக இத்தேர்தல் சமூகவலைத்தள பிரச்சாரங்கள் ஊடாக சூடுபிடித்துள்ள நிலையில் பாரிஸை நூறு வீதம் சைக்கிள்களும் குறைந்தளவு கார்களும் கொண்ட நகரமாக மாற்றும் விரிவான திட்டத்துடன் மீண்டும் வாக்குக் கேட்டு களத்தில் நிற்கிறார் ஹிடல்கோ.

பாரிஸ் நகர வாசிகளிடையே சைக்கிள் பாவனை அதிகரித்து வருகிறது. கொரோனா பொது முடக்க காலத்தில் அது மேலும் பல மடங்கு உயர்ந்திருப்பது அவரது ‘சைக்கிள் நகரம்’ திட்டத்துக்கு மேலும் ஆதரவைச் சேர்த்திருக்கிறது.

நகரின் எல்லாத் தெருக்களிலும் சைக்கிள்களில் பாதுகாப்பாக பயணம் செய்யக்கூடிய தனியான சைக்கிள் வீதி வலையமைப்பை(Vélopolitain) நிறுவும் திட்டம் இம்முறை அவரது தேர்தல் வாக்குறுதிகளில் முக்கியமானது.

சூழலியல் பேணும் பல்வேறு திட்டங்களுடன் அமைதி, அழகு, ஆரோக்கியம் மிக்க வாழ்விடமாகத் தலைநகரை மாற்றுவது ஹிடல்கோவின் இலக்கு. இதற்காக சூழல் மாசடைதலைத் தவிர்க்கும் நோக்கில் டீசல் கார்களின் பாவனையைப் படிப்படியாக குறைத்து முற்றாக இல்லாமற்செய்ய அவர் உறுதி பூண்டுள்ளார். வீதியோரங்களில் தற்சமயம் புழக்கத்தில் உள்ள கார் தரிப்பிடங்களைப் பயன்படுத்தி புதிதாக சைக்கிள் பாதைகளையும் பாதசாரிகளுக் கான நடைபாதைகளையும் விரிவுபடுத்தவும் மரங்களை நடுவதற்கும் அவர் திட்டமிட்டுள்ளார்.

நகர வீதிகள் அனைத்திலும் வாகனங்களின் வேகத்தை மணிக்கு 30 கிலோமீற்றர்களாகக் குறைப்பது-

நகரைச் சுற்றி வளையமாக அமைந்துள்ள Périphérique எனப்படும் நெடுஞ்சாலைகளில் வேகத்தை மேலும் தணிப்பதுடன் பாதசாரிகள் கடவைகளை நிறுவுதல்- போன்ற பல புதிய திட்டங்கள் ஹிடல்கோவின் வாக்குறுதிகளில் உள்ளன.

கொரோனா வைரஸ் பீதிக்கு மத்தியில் கடந்த மார்ச்சில் நடத்தப்பட்ட முதற் சுற்று வாக்குப்பதிவில் 29.03 சதவீத வாக்குகளுடன் முன்னணியில் உள்ள ஹிடல்கோ, சுமார் 10 சதவீத வாக்குகளைப் பெற்ற பசுமைக்கட்சி ஒன்றுடன் தேர்தல் கூட்டணி அமைத்துள்ளார். இதனால் இரண்டாம் சுற்று வாக்குப்பதிவில் அவரது வெற்றி பெரும்பாலும் உறுதி என்று நம்பப்படுகிறது.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

E-PAPER

சுவாசக்கவசம் : யார் ? எதற்கு ? எவ்வாறு ?